உள்ள சக்தி

 

            நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பிருத்வியிலே மானுடச் சமுதாயம் தோன்றிய காலம் தொட்டு மக்களை நெறிபடுத்தி இலக்கை நோக்கி இட்டுச் செல்ல, இயற்கையின் முழுமையாலும் காலத்தின் கட்டளையாலும் இங்கு அனுப்பப்பட்ட சிந்தனையாளர்கள் பலராவார்கள். நாம் ஆன்மீக பயணத்தைத் தொடர்கின்ற போது ஒன்று நன்றாகத் தெரிகின்றது. அறிய வேண்டியதை அறிந்து கொள்ளாத காரணத்தால் அல்லவா இத்தனைத் துன்பப்பட்டுக் கொண்டிருந்தோம். இந்தப் பிறவியிலே இத்தனை ஆண்டுகள்  துன்பப் பட்டோம் என்பது மட்டுமல்ல, எத்தனையோ கோடி பிறவிகளாக அல்லவா இந்த துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்? இதனால் ஏக்கம் வந்து விடக்கூடாது. இப்பொழுதாவது அறிந்து கொண்டோமே, இப்பொழுது கூட அறிந்து கொள்ளவில்லை என்றால் என்னவாகும்? என்ற நிலை வரவேண்டும். புத்தர் பெருமானார் சொல்வார், உறக்கம் பிடிக்காத ஒருவனுக்கு இரவு மிக நீண்டதாகவும் துன்பம் நிறைந்ததாகவும் இருக்கும். அதுவே போல சரியான தத்துவத்தை பற்றிக் கொள்ளாத ஒருவனுக்கு வாழ்க்கை பயணமானது மிகவும் நீண்டதாகவும் இன்னல் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதாக. அப்படி ஒரு தத்துவத்தை நாம் கண்டிருக்கிறோம். இதைவிட்டு வேறு எங்கேயும் தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. சிற்றம்பலமும் சிவமும் அருகிருக்க வெற்றம்பலம் தேடிவிட்டேனே, பட்டினத்தார் சொன்னார். அப்படி இங்கேயே  இருக்கிறது, இதைப் பற்றிக் கொள்ளாது போயிருக்கிறோம். ஏதோ போட்டு வைத்திருக்கிறோம், நமக்கு இப்பொழுது கிடைக்கிறது, அதைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

 

 

            வள்ளுவ உள்ளப்படி நாம் வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொண்டோம் என்றால் வாழ்க்கையிலே வளங்கள் அத்தனையும் வந்து சேரும். நம் காலத்திலேயே ராமையா பிள்ளை என்று ஒருவர் இருந்தார். அவர் கண்பார்வை முழுவதுமாக இழந்து விட்டார். ஜீவனத்துக்கு வழி இல்லை. ஏன் வாழ்கிறோம் என்றம் தெரியவில்லை. வாழ்வதிலே பொருள் இல்லை என்றும் முடிவெடுத்து விட்டார். அவருடைய தமிழாசிரியர் அவரை அழைத்து திருக்குறள் படி, அது உன்னைக் காப்பாற்றும் என்று சொன்னார். கண் பார்வை இல்லாத காரணத்தால், தன் பிள்ளைகளை திருக்குறள் படிக்கச் சொல்லி உரைநூல்கள் படிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டே வந்தார். தான் படிப்பதைவிட கேட்பதிலே அவராலே நன்றாக கிரகித்துக் கொள்ள முடிந்தது. இதை வள்ளுவப் பெருந்தகையே சொல்லி வைத்திருக்கிறார், கேள்வி ஞானத்தின் பெருமையைப் பற்றி.

 

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.

 

இரண்டு அடிகளிலே ஐந்து முறை ஒரு சொல்லை சொன்னார் என்றால், வலியுறுத்துகிறார் என்று பொருள். அந்த வகையிலே ராமையா பிள்ளை குறளை கேட்டுக் கொண்டார், உரைநூல்கள் எல்லாம் படிக்கச் சொன்னார். அத்தனையும் உள்ளாக நன்றாக கிரகித்துக் கொள்ள முடிந்தது. திருக்குறள் விளக்கம் கொடுக்கத் தொடங்கினார், மிகச்சிறந்த விளக்கம் தரத் தொடங்கினார். பார்வை இல்லாத பெரியவர் சிறந்த விளக்கம் கொடுத்தார். குடும்பத்தையும் அவராலே பராமரிக்க முடிந்தது. அண்மைகாலம் வரை வாழ்ந்திருந்தார் அவர். திருக்குறள் ராமையா பிள்ளை என்றே அவரைச் சொல்வார்கள். திருக்குறள் விளக்கம் தரும் அதே நேரத்திலே பின்னாலிருந்து ஒரு மணி விட்டுவிட்டு அடிப்பார்கள், ஒவ்வொரு முறையும் இரண்டு, ஆறு, நான்கு என்று மாறி மாறி அடிப்பார்கள். அதே சமயம் வயலினிலே ராகம் வாசிப்பார்கள். பின்னாலிருந்து மல்லிகைப் பூ இவர் முதுகிலே போட்டுக் கொண்டிருப்பார்கள். திருக்குறள் விளக்கம் கொடுத்து முடித்ததும் அவர் சொல்வார், முதலில் இரண்டு முறை மணி ஒலித்தது, பிறகு ஆறு முறை பிறகு நான்கு முறை என்று அப்படியே சொல்வார். ஐந்து முறை ராகம் வாசிக்கப் பட்டது, ரீதிகொளை வாசிக்கப் பட்டது, சிம்மேந்திர மத்யமம் வாசிக்கப்பட்டது என்று அதையும் சொல்வார். என் முதுகின் மேலே 23 மலர்களை போட்டார்கள் என்றும் சொல்வார். தஷாவதானி என்று சொல்வது, பத்து செயல்களை ஒரே சமயத்தில் செய்யக் கூடியவர்கள். அந்த அளவுக்கு வள்ளுவருக்கு திறமை இருந்திருக்கிறது, ஒரு சக்தி இருந்திருக்கிறது என்பதை பார்க்கிறோம். பிறருக்கும் ஊட்டுவிக்க முடிகிறது.

 

 

             கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனார் நல்ல தமிழ் அறிஞர், வள்ளுவரிடம் நல்ல ஈடுபாடு கொண்டிருந்தார். குறளுக்கு உரை கூட எழுதியிருக்கிறார் அவர். சிறையில் இருந்த காலத்திலே மற்ற கைதிகளுக்கு திருக்குறள் வகுப்புகள் நடத்துவார். அதிலே ராஜாஜியும் ஒரு மாணவர். மிகவும் கண்டிப்பானவர் வ உ சி. ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் சொல்வார். பரிமேலழகர், மணக்குடவர் என்று ஒவ்வொரு உரையாக எடுத்துச் சொல்லி, எது சிறந்தது என்று விளக்குவார். அத்தனையும் மற்ற கைதிகள் முறையாகக் கேட்டுக் கொள்ள வேண்டும். வீட்டுப் பாடம் செய்ய வேண்டும். மறுநாள் வகுப்பு கூடிவிட்டதென்றால் முந்தைய நாள் பற்றி கேள்விகள் கேட்பார். யாரேனும் ஒருவர் சரியாக பதில் சொல்லவில்லை என்றால் அன்றும் பழைய பாடத்தையே எடுப்பார். அந்த பழைய பாடத்தை அத்தனை பேரும் அறிந்து கொள்கின்ற வரை அதிலேயே இருப்பார். வ உ சிதம்பரம் பிள்ளை 64 வயது வரை வாழ்ந்திருந்தார். ஆறாண்டு காலம் அவர் சிறையில் அனுபவித்த சிரமம் கொஞ்சநஞ்சம் இல்லை. ‘மேலோர்கள் வெஞ்சிறையில் விழுந்து கிடப்பதுவும், நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ’, பாரதி கேட்டான் அவரை குறித்து. ஆறாண்டு காலம் சிறை அனுபவம் அவர் உடல் ஆரோக்யத்தை சிதைத்துவிட்டது. தூத்துக்குடியிலே இருந்தார், திருக்குறளிலே மிகுந்த ஈடுபாடு. காலையிலே கீரைபாத்திக்கு தண்ணீர் பாய்ச்சுவார், 10 குறட்பாக்களை சொல்லிக் கொண்டு. ஒரு நாளை பொழுதுக்கு 30, 40 குறட்பாக்களை சொல்லி விடுவார். இளைஞர்கள் கூடுவார்கள் அவர் இல்லத்தில் மாலை நேரத்திலே. விடுதலை போராட்டத்தைப் பற்றி எல்லாம் சொல்வார். குறளிலே நுண்மையான விளக்கங்கள் எல்லாம் தருவார் இளைஞர்களுக்கு. மிக மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு நாள் இளைஞர்களுக்கு செய்தி வந்தது, வந்தே மாதரம் பிள்ளை அழைக்கிறார் என்று. அந்த மாவட்டத்திலே வந்தே மாதரம் பிள்ளை என்று தான் அவரை குறிப்பிடுவார்கள். ஏதோ தேசிய திருவிழாவை மறந்து விட்டோமோ என்று அத்தனை பேரும் கூடினார்கள். அப்பொழுது உடல்நிலை மிகவும் பாதிக்கப் பட்டிருந்தது அவருக்கு. அப்பொழுது சொன்னார், ‘எதற்காக அழைத்தேன் தெரியுமா? இன்னும் சிறிது நேரத்திலே என் உயிர் பிரிய போகிறது. பாரதி பாடல் பாடுங்களடா’, என்றார். செந்தமிழ் நாடென்ற போதினிலே பாடிக் கொண்டு வந்தார்கள்.  அவரும் ஈன ஸ்வரத்திலே பாடிக் கொண்டேயிருந்தார். ‘பாரத சமுதாயம் வாழ்கவேபாடுகின்ற போது உயிர் பிரிந்தது. உயிர் பிரியும் எனத் தெரிந்து வைத்துக் கொண்டு அஞ்சாது அதை எதிர்கொள்ளக் கூடிய சக்தி, தமிழுக்கு இருந்த சக்தி அல்லவா அவருக்கு வந்து சேர்ந்தது? வள்ளுவரை பயின்ற காரணத்தாலே, பாரதி பயின்ற காரணத்தாலே தானே அந்த உள்ளச் சக்தி வந்தது. ஆக நாமும் அந்த உள்ளச் சக்தியை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை பார்க்கிறோம். கேள்வி செல்வத்துக்கு ஈடானது கிடையாது.

 

 

(Excerpts from a Lecture by Sage TGN)

 

 

Send this article to a friend!
Also Visit www.tgnfoundation.org